×

மேலூர் அருகே அமமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது: உறவினரே கூலிப்படையை வைத்து கொன்றது அம்பலம்

மேலூர்: மேலூர் அருகே அமமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், உறவினரான அதிமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (54). அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர், வல்லாளபட்டி கூட்டுறவு சங்க தலைவராக இருந்தார். பின்னர் டி.டி.வி.தினகரனின் அமமுகவில் இணைந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன் அமமுக பேரூராட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை அழகர்கோவில் சாலையில் உறவினருடன் நடைப்பயிற்சி சென்றார். செட்டியார்பட்டியை அடுத்த மொட்டப்பாறை அருகே, 3 டூவீலர்களில் வந்த 6 பேர் பயங்கர ஆயுதங்களால் அசோகனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அசோகனின் உறவினர்கள் மற்றும் அமமுகவினர் மேலூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மதுரையில் பிரேத பரிசோதனை முடிந்த அசோகனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இதுகுறித்து மேலூர் டிஎஸ்பி சுபாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அசோகனை கொலை செய்ய உத்தரவிட்டதாக உறவினரான அ.வல்லாளபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக பிரமுகருமான உமாபதி (55), அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (எ) அடப்பு முருகேசன் (46) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கூலிப்படையைச் சேர்ந்த மதுரை தத்தனேரி பிரகாஷ் (26), ஆண்டார் கொட்டாரம்  செல்வம் (48), யாகப்பா நகர் பன்னீர் (47) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தத்தனேரி பாலகுரு, மதுரையை சேர்ந்த குண்டு ராமச்சந்திரன், கண்ணதாசன் ஆகியோரை தேடி வருகின்றனர். 30 ஆண்டுகள் நட்பாக இருந்த அசோகனும், உமாபதியும் அரசியலில் எதிரெதிர் அணிக்கு மாறியதே கொலைக்கான காரணம் என கூறப்படுகிறது.

உமாபதியின் குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
அசோகன் கொலையை கண்டித்து அ.வல்லாளபட்டியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு, 52 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திரண்டனர். கூட்டத்தில், ‘‘கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் நடக்கும் எந்த நல்லது, கெட்டதில் கிராம மக்கள் கலந்து கொள்ளக்கூடாது. குற்றவாளிகளை கிராமத்தில் இருந்து யாரும் ஜாமீன் எடுக்கக்கூடாது. வல்லாளபட்டி வக்கீல்கள் இவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடாது. கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில், டிஎஸ்பி சுபாஷ் பேசுகையில், ‘கிராமத்து தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.


Tags : persons ,murder ,AIADMK ,Ammukkam Pramukh ,Melur ,arrest , Melur, amamk figure murder, AIADMK leader, 5 arrested
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்